பெண் டாக்டரிடம் ரூ.13 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் கைது

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் பெண் டாக்டர் ஒருவர், இணையதளம் மூலம் திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் டாக்டரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (வயது 28) பார்த்துள்ளார்.

ரூ.13 லட்சம்

உடனே, தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக் ராஜ், அந்த பெண் டாக்டருடன் பழகியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் ஒரு ஐபோனும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் டாக்டர், கார்த்திக் ராஜை தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து திருமணம் பற்றி பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், கார்த்திக் ராஜ் பல காரணங்களை சொல்லி, நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்துள்ள அந்த பெண் டாக்டர், இதுகுறித்து தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். அந்த உறவினர் உடனடியாக அடையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திக் ராஜை தேடி வந்தனர்.

காதல் மன்னன்

இந்த நிலையில், போலீசாரிடம் சிக்கிய கார்த்திக் ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. அதில், அவர் காதல் மன்னனாக வலம் வந்தது தெரியவந்தது. பி.காம். வரையே படித்துள்ள கார்த்திக் ராஜ், தன்னை டாக்டர் என கூறி ஏமாற்றியுள்ளார்.

மேலும், திருமண தகவல் மையத்திலும் வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, இந்த பெண் டாக்டர் மட்டுமல்லாது, மேலும் பல பெண்களிடம் பழகி, லட்சக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

கைது

அவரிடம் இருந்து ரூ.98 ஆயிரம், 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கார்த்திக் ராஜை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திசிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *