பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாத ஆசிரியை

சென்னை நெற்குன்றத்தில் தனியாருக்கு சொந்தமான மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய 3 வயது மகள் தன்ஷிகாவும் இந்த பள்ளியில் படித்து வருகிறாள். பள்ளிக்கு சென்று திரும்பிய தன்சிகாவுக்கு கடந்த 2 நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது தன்ஷிகா, தான் வகுப்பறையில் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று, வகுப்பு ஆசிரியையிடம் இதுபற்றி கேட்டனர். அவர் முறையாக பதில் அளிக்காததால் வகுப்பறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் தன்ஷிகா மற்றொரு குழந்தையுடன் விளையாடுகிறாள். அப்போது அந்த குழந்தை நாற்காலியுடன் சேர்த்து தன்ஷிகாவை கீழே தள்ளிவிடுகிறது. இதில் தரையில் விழுந்த தன்ஷிகா எழுந்திருக்க முடியாமல் அப்படியே கீழே கிடக்கிறாள். வகுப்பு ஆசிரியை அந்த குழந்தையை மட்டும் தூக்கி, சுவர் ஓரமாக அமர வைக்கிறார். ஆனால் கீழே விழுந்து கிடந்த தன்ஷிகாவை தூக்கிவிடவில்லை. அவளை கண்டுகொள்ளாமல் நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தன்ஷிகாவின் பெற்றோர், இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தவர்கள், நாற்காலியில் இருந்து விழுந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் இருந்த ஆசிரியையின் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *