வீட்டு வாடகை 20 சதவீதம் வரை உயர்வு கிடுகிடு காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கான வாடகை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. புதிதாக குடியேற காலி வீடுகள் கிடைக்காததால், மக்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரானாவில் இருந்து மீண்டு இயல்பு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, மக்கள் சென்னைக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. சென்னையின் மையப்பகுதி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் மக்கள் குடியேறுவது அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்து, லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக தினமும் வந்து செல்கின்றனர். ஓரளவுக்கு வருவாய் உயரும் நிலையில், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேற விரும்புகின்றனர்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களை ஒட்டிய பகுதிகளில் வாடகை வீடு பெற கடும் போட்டி ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் வாடகையை வெகுவாக உயர்த்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஏப்., மே மாதங்களில் வாடகை வீடுகளுக்கு இயல்பாகவே அதிக கிராக்கி இருக்கும். வேலை செய்யும் இடம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் வீடு மாற, முயற்சிப்பதே இதற்கு காரணம்.
இதனால், ஒவ்வொரு ஆண்டும், 5 முதல் 10 சதவீதம் வரை வீட்டு வாடகை உயர்வது வழக்கம். ஆனால், தற்போது, சென்னை மற்றும் புறநகரில், 20 சதவீதம் வரை வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகை தொழில் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.
இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கும், சென்னையில் வேலை கிடைக்கும்; உரிய வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதனால், மக்களின் வருகை அதிகரிப்பால், காலி வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வீடு வாடகைக்கு விடப்படும் என்பதை குறிக்கும் வகையில், ‘டூலெட்’ போர்டுகளை பார்ப்பதே அரிதாகி வருகிறது.
கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடித்து, விற்காமல் உள்ளது. இந்நிலையில், வாடகை வீடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
குறிப்பிட்ட சில இணையதளங்கள் மற்றும் உள்ளூர் தரகர்கள் தலையீடு அதிகரிப்பால், காலி வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
வீட்டு உரிமையாளர் நியாயமாக நிர்ணயிக்கும் வாடகையைக்கூட உள்ளூர் தரகர்கள், தங்கள் கமிஷனுக்காக உயர்த்தி, மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு படுக்கை அறை வீடுகள் தேவை 11 சதவீதமாகவும், இரண்டு படுக்கை அறை வீடுகளின் தேவை 66 சதவீதமாகவும், மூன்று படுக்கை அறை வீடுகளின் தேவை 23 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணம், மின்சார கட்டணம் போன்றவையும் வெகுவாக உயர்த்துள்ளன.
இதை கருத்தில் வைத்து தான் பெரும்பாலான உரிமையாளர்கள் வீட்டுக்கான வாடகையை நடப்பு ஆண்டில், 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். வாடகை வீடு விவகாரங்களுக்கான ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இதில் தலையிடுவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.