பெண் காவலர்களுக்கு உரிய வசதிகள் மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
”பெண் காவலர்கள் பணிபுரியும் இடத்தில், உரிய அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும்,” என, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிவுறுத்தினார்.
இந்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் சார்பில், கடந்த 2002ம் ஆண்டு முதல் ‘காவல் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு, தைரியம், சேவை ஆகியவற்றை கவுரவித்து, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், அவர்களுக்கான அங்கீகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக, இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இதன் 11வது தேசிய மாநாடு, வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் அரங்கில், நேற்று காலை துவங்கியது. இதில் நாடு முழுதும் இருந்து, பெண் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் என, 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில், காவல் துறையில் பெண்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பது, குடும்ப வாழ்க்கைக்கும், பணி சார்ந்த வாழ்க்கைக்கும் இடையே, சமநிலையை உருவாக்குதல், பெண் காவலர்களின் உடல் மற்றும் மன நலனைப் பேணுதல், அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்தல் உட்பட பல்வேறு விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடக்கின்றன.
மாநாட்டை துவக்கி வைத்து, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது, விரைவான விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு, காவல் துறையில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில், வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டிருந்த பெண்கள், இன்று ஆண்களுக்கு நிகராக, அனைத்து துறைகளிலும், கோலோச்சி வருகின்றனர்.
ஆனால், காவல் துறையில் பணியாற்றும் பெண்கள், பணி, குடும்பம் என, இரண்டு பொறுப்புகளை சுமக்கின்றனர். அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. பெண் காவலர்களுக்கு, அவர்களின் பணியிடத்தில், உரிய அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். காவல் துறையில் பெண்கள் நலன் சார்ந்து அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழக காவல் துறை பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. நாகதேவி வரவேற்றார். தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உட்பட பலர் பங்கேற்றனர்.