முதலுதவி சிகிச்சை மையத்தை புனரமைக்கும் மாநகராட்சி
மெரினா சர்வீஸ் சாலையில், சுற்றுலாத்துறை சார்பில், கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை ஆகிய இரண்டு இடங்களில், முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த முதலுதவி மையம், எந்தவித அறிவிப்புமின்றி மூடப்பட்டன.
இதனால், முதலுதவி சிகிச்சை தேவைப்படுவோர் வேறுவழியின்றி ராயப்பேட்டை, கஸ்துாரிபாய் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவற்றை திறக்கக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் சென்றன.
இதையடுத்து, சிதிலமடைந்து வந்த முதலுதவி சிகிச்சை மையத்தை புனரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புனரமைப்பு பணிகள் முடிவடைந்த பின், மையத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்து, டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.