புழல் உபரி நீர் கால்வாய் கழிவு நீர் வடிகாலான அவலம்
செங்குன்றம் புழல் ஊராட்சி ஒன்றியம், விளங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம் கிராமத்தில் இருந்து தர்காஸ் வழியாக செல்லக்கூடிய மழை மற்றும் புழல் உபரிநீர் செல்ல வேண்டிய கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது.
இது குறித்து புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் புழல் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டால் வெளியேறும் தண்ணீர், இந்த கால்வாய் வழியே சென்று கடலில் கலக்கும்.
தற்போது இந்த கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியிருப்பதுடன், விளாங்காடுபாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்கள் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாகவே, இந்த கால்வாயை ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, துார்வாரி சீர்படுத்தவோ அரசு அதிகாரிகள் முன் வரவில்லை என கூறப்படுகிறது.
தற்போது வெயில் காலம் என்பதால் கால்வாயை துார் வாரி சீர்படுத்தினால், அடுத்த மழையின்போது வெள்ள பாதிப்பில் இருந்து விளாங்காடுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.