பட்டா குளறுபடியை சரிசெய்து தாருங்கள்! ஜமாபந்தியில் மனு
தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், வருவாய் துறை ரீதியான தீர்வுகளுக்கான ஜமாபந்தி நேற்று துவங்கியது. தாம்பரம் தாலுகாவில் முதல் நாளில், எட்டு கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
பல்லாவரம் தாலுகாவில், ஆறு கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. பல்லாவரத்தில், எட்டு ஆண்டுகளாக நிலவும் பட்டா குளறுபடியை சரிசெய்து தரவேண்டும் என, அப்பகுதிவாசிகள் மனு கொடுத்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லாவரம் தாலுகாவில் உள்ள ஜமீன் பல்லாவரத்தில், 1974ல் உருவான ஜெயலட்சுமி நகரில், 32 குடியிருப்புகள் உள்ளன. இவை, நகர் மற்றும் ஊரமைப்புத்துறை அங்கீகாரம் பெற்றவை.
கடந்த 2017ல், இம்மனைகளுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டது. பட்டாக்கள், பல்லாவரம் பகுதி ஆவணத்திலும் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது, குடியிருப்பின் பெயர், ஜெயலட்சுமி நகருக்கு பதில், கிருஷ்ணா நகர் என்றும், மனைகளின் பரப்பும் தவறாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சில பட்டாதாரர்களின் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை மாற்றி, முறையாக பட்டா வழங்குமாறு, எட்டு ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தலைமை செயலகம் முதல் கலெக்டர், தாசில்தார், அமைச்சர், எம்.எல்.ஏ., வரை, 100 முறைக்கு மேல் மனு கொடுத்தும், யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்த பிரச்னை எட்டு ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.