குழந்தை பிறக்க மாந்திரீக பூஜை 5 சவரன் திருடி சிக்கிய ‘ஜோதிடர்’
கொளத்துார், வெற்றிவேல் நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55. சொந்த வீட்டில் வசிக்கும் இவர், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலினி, 52; தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த 3ம் தேதி ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்ற நபர், தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய விசாலினியும், ரவிச்சந்திரனும், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், ஜோதிடர், ‛பூஜைக்கு தங்க நகை வேண்டும்’ எனக் கேட்டுள்ளார். தம்பதியும் 5 சவரன் செயினை கொடுக்க, அந்த நகையை புளி கரைசலில் போட்டு பூஜை செய்து கொடுத்துள்ளார்.
பூஜை முடித்த நிலையில், ‘மாலையில் நகையை எடுத்துக் கொள்ளுங்கள்’ என, அந்த ஜோதிடர் கூறி சென்றுள்ளார்.
மாலையில் புளிகரைசலில் நகையை தேடியபோது காணவில்லை. இது குறித்து கடந்த 4ம் தேதி கொளத்துார் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜோதிடர் எனக்கூறி ஐந்து சவரன் நகையை ‘ஆட்டை’ போட்டது போலி ஜோதிடரான திருநெல்வேலி, கீழக்கரையைச் சேர்ந்த சூர்யா, 53, என்பது தெரியவந்தது. அவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.