கால்நடைகளால் தொல்லை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

சென்னை கடற்கரை சாலையை இணைக்கும் பிரதான சாலையாக ராயப்பேட்டை, ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சாலைகள் உள்ளன.

இவ்வழியே அலுவலகம், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட இடங்களுக்கு, தினமும் லட்சக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக, ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ் மற்றும் ஜாம்பஜார் பகுதியில், கால்நடைகளின் நடமாட்டம் அதிகம். இவ்வழியே லேடி வில்லிங்டன் மாதிரி பள்ளி, மாநிலக் கல்லுாரி, அரசு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகளுக்கு இடையுறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது:

தினசரி அலுவலக பணிக்காக, ஐஸ் ஹவுஸ் வழியே கடற்கரை சாலைக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாடு தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டது. மாநகராட்சி சார்பில், சாலைகளில் திரியும் கால்நடை முதல் முறை பிடிபட்டால், உரிமையாளருக்கு 10,-000 ரூபாயும்; இரண்டாவது முறை பிடிபட்டால், 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்துள்ளனர். ஆனால், சென்னையில் கால்நடை வளர்ப்போர் இதை பின்பற்றுவதில்லை.

அதேபோல், மாநகராட்சி அதிகாரிகளும், இவற்றை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை, அப்புறப்படுத்த மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *