ரயில் பயணி தவற விட்ட ரூ.7 லட்சம் நகை ஒப்படைப்பு
எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டியன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நடைமேடையில் ‘பேக்’ ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றி, ரயில்வே வணிக மேலாளரிடம் ஒப்படைத்தனர். அதை பிரித்து பார்த்தபோது, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 சவரன் நகை இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராகவி என்பவர், ரயில்வே செயலி வாயிலாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு புகார் அளித்திருந்தார். அதில், ‘கடந்த 8ம் தேதி எழும்பூரில் இருந்து குருவாயூர் ரயிலில் பயணம் செய்ய ஏறும்போது, அவசரத்தில் நிலையத்தில் பையை மறந்து சென்றுவிட்டேன்; மீட்டு தரவேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார். ரயில்வே போலீசார் விசாரித்து, நகை மற்றும் உடைமைகளை சரிபார்த்து, அவரிடம் ஒப்படைத்தனர்.