சோழிங்கநல்லுார் மூடு கால்வாய் பணி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கைமாறுகிறது
பருவமழையின்போது சேலையூர், காரணை, ஒட்டியம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கும் வகையில், கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், உபரி நீர் பகிங்ஹாம் கால்வாய்க்கு நேராக செல்வதில்லை. மாறாக, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஒக்கியம் மடு வழியாக, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சதுப்பு நிலத்தில் 8 கி.மீ., பயணித்து, மீண்டும் தெற்கு நோக்கி பகிங்ஹாம் கால்வாய் வழியாக செல்கிறது.
இதனால், சீரான நீரோட்டம் இல்லை. இதன் காரணமாக, ஆங்காங்கே வெள்ளம் திசை மாறி, துரைப்பாக்கம், பெருங்குடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதிகளில் குடியிருப்புகளில் உட்புகுந்து, கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதற்கு நிரந்தர தீர்வு காண, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி திசை மாறி வரும் வெள்ளத்தை, நேராக பகிங்ஹாம் கால்வாயில் விட, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
சோழிங்கநல்லுாரில் இருந்து நேராக பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், 47 கோடி ரூபாயில், மூடு கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த மூடு கால்வாய், எல்காட் சந்திப்பு சதுப்பு நிலத்தில் துவங்கி, சோழிங்கநல்லுார் சந்திப்பு வழியாக, பகிங்ஹாம் கால்வாய் வரை, 1.70 கி.மீ., துாரம், 10 அடி அகலம், 8 அடி ஆழத்தில், சாலையின் இரு பகுதிகளிலும் கட்டமைக்கப்படுகிறது. இந்த பணி 2022ம் ஆண்டு துவங்கியது.
சாலையின் மைய பகுதியில் கட்டுவதால், கனரக வாகனங்கள் செல்லும் வகையில், மேல் பகுதி ‛சிலாப்’ ஒன்றேகால் அடி கனத்தில் அமைக்கிறது. இந்த பணி, 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. சோழிங்கநல்லுார் சந்திப்பில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடப்பதால், அதன் ஊடாக இரண்டு பகுதியில் மூடு கால்வாய் கட்டுவதால், வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மூடு கால்வாய் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை செய்கிறது. மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பகுதியில் துாண்கள் அமைவதால், அதை ஒட்டி மூடு கால்வாய் கட்டுவதை, மெட்ரோ ரயில் நிர்வாகமே செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், மூடு கால்வாய் பணி முடிய இன்னும் ஓராண்டிற்கும் மேலாகும் என தெரிகிறது.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எல்காட் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், மூடு கால்வாய் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த கால்வாயை, மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பகுதியில், 250 அடி துாரத்துடன் இணைக்க வேண்டும். முதலில் எங்கள் துறையே இணைப்பதாக இருந்தது.
அதற்கு சேர்த்து ஒப்பந்தம் விடப்பட்டது. மெட்ரோ ரயில் துாண்களை ஒட்டி மூடு கால்வாய் செல்வதால், இரு துறைகள் செய்தால் வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், மெட்ரோ ரயில் நிர்வாகமே கால்வாய் இணைப்பு பணியை செய்வதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் பருவமழைக்கு முன், கால்வாயை இணைக்க வாய்ப்பில்லை. எல்காட் அருகில், சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில், 14 கோடி ரூபாயில் 250 அடி நீளம், 100 அடி அகலத்தில் நீர்வழி தரைப்பாலம் அமைகிறது. அந்த பணி முடியும் நிலையில், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, மேடவாக்கம், சொழிங்கநல்லுார் பகுதிகள் வெள்ள பாதிப்பு குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.