15 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு தொழிற்சாலை ஊழியர்கள் நெகிழ்ச்சி
திருவொற்றியூரில், ‘வெஸ்டன் இந்தியா மேட்சஸ் கம்பெனி லிமிடெட்’ எனும், தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, 1927ம் ஆண்டு துவக்கப்பட்டது. தீப்பெட்டி தொழில் நலிவடைந்தது. கடந்த 2010ல் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.
இதனால், இங்கு பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள், நிறுவன குடியிருப்புகளில் இருந்த வெளியேறி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், விம்கோ தீப்பெட்டி தொழிற்சாலையில், கடைசியாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் ‘வாட்ஸாப், பேஸ் புக்’ மூலமாக இணைந்து, பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னாள் ஊழியர்களை தொடர்பு கொண்டு, குடும்பங்கள் சந்திக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த விழா, நேற்று முன்தினம், திருவொற்றியூர், தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில், தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களின், 90 குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பழைய நினைவுகளில் மூழ்கி அனைவரும் பேசி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.