சிறப்பு குழந்தைகளை அரசு பாதுகாக்கணும் கவர்னர் ரவி பேச்சு
சர்வதேச அன்னையர் தின விழா, நேற்று மாலை, கவர்னர் மாளிகையில் சிறப்பிக்கப்பட்டது.
இதில், உலக அளவிலும், தேசிய, மாநில, மாவட்ட அளவில், தனித்திறன் சாதனை படைத்த, 106 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது அம்மாக்கள், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விருது வழங்கிய பின், கவர்னர் ரவி பேசியதாவது:
அம்மாக்களை, ஒரு நாள் மட்டும் போற்றினால் போதாது; தினமும் போற்றப்பட வேண்டியவர்கள். என் தாயின் வளர்ப்பு தான், எனக்கு ஊக்கத்தையும், சக்தியையும் கொடுத்தது. அம்மாக்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.
அம்மாக்கள் பல வகைகளில், தங்கள் விருப்பத்தை, தேவையை விட்டு கொடுத்து, குழந்தைகளுக்காக, தன் குடும்பத்திற்காக வாழ்கின்றனர்.
அதிலும், சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்கும் அம்மாக்கள் போராளிகள்.
பெற்றோருக்கு, தமக்கு பின் சிறப்பு குழந்தைகளுக்கு யார் இருப்பர் என்ற கவலை இருக்கும். இந்த பொறுப்பை பொறுப்பை, இந்த சமூகமும், அரசும் எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த குழந்தைகளுக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், அனைத்தும் செயல் வடிவம் பெறவில்லை.
சிறப்பு குழந்தைகளை கவனித்து கொள்வதை சுமை என்று சொல்லமாட்டேன். அது ஒரு பொறுப்பு. சிறப்பு குழந்தைகளும் இந்த நாட்டு பிரஜைகள் தான். அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.