கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோத்சவ விழா நாளை துவக்கம்
திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை மாதம், பிரம்மோத்சவ விழா துவங்கி, 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 7:00 மணிக்கு, செல்வர் உற்சவத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி கொடியேற்றம், மற்றும் சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் வைபவம் நடக்கும்.
அதைத்தொடர்ந்து, அம்ச வாகனம், சிம்மம், காளி, சூரிய பிரபை, சேஷ வாகனம், நாச்சியார் கோலம், அனுமந்த வாகனம், சூர்ணாபிஷேகம், யானை, கேடயம், வெண்ணை தாழி மண்டகப்படி, குதிரை, தீர்த்தவாரி பல்லக்கில் சுவாமி எழுந்தருள்வர்.
முக்கிய நிகழ்வான, கருட சேவை 13ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 17ம் தேதி நடக்கும். நிறைவாக, 19ம் தேதி, கொடியிறக்கமும், அதை தொடர்ந்து ஆறு நாட்கள் விடையாற்றி உற்சமும் நடக்கிறது.
திருவொற்றியூர், அஜாக்ஸ் – ஜீவன்லால் நகரை ஒட்டியுள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் செயல்படும் பொன்னியம்மன் கோவில், சித்ரா பவுர்ணமி உற்சவம், நாளை துவங்குகிறது.
அதன்படி காலை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, மாலையில், சண்டியாக சாலை, முதல் கால யாக சாலை, இரவு, 108 திருவிளக்கு பூஜை நடக்கும்.
தொடர்ந்து, 10ம் தேதி, பட்டு வஸ்திரம், மாங்கல்யம், மெட்டி சமர்ப்பணம், கலசாபிஷேகம் நடக்கும். 11ம் தேதி, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக பெருமானுக்கு சத்ரு சம்ஹார பூஜை, 12ம் தேதி, தேரடி – அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம்; பொன்னியம்மனுக்கு பாலாபிஷேகம்.
மாலையில், உற்சவ தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். 13ம் தேதி, 108 சங்காபிஷேகத்துடன் உற்சவம் நிறைவுறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.