பீச்சில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க திருவான்மியூரில் பிரத்யேக வடிவ கூடை
சென்னையில், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு அடுத்து, மக்கள் அதிகம் கூடும் கடற்கரையாக திருவான்மியூர் உள்ளது. இங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த கடற்கரையை துாய்மையாக வைத்திருக்க, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, ‘ரியால்டோ’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தினர், கடற்கரையை ஒட்டி உள்ள நியூ பீச் சாலையில், 700க்கும் மேற்பட்ட அரச மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
குடிநீர், ஜூஸ் போன்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி வரும் மக்கள், அதை குடித்து விட்டு கடற்கரையில் வீசி செல்கின்றனர்.
தொட்டி இருந்தாலும், அதில் போடுவதை பலர் கடைப்பிடிப்பதில்லை. இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், காற்றில் பறந்தும், அலை அடித்தும் கடலில் செல்கிறது.
இதனால், கடல் மாசு அதிகரிப்பதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பாட்டில்களை மட்டும் சேகரிக்கும் வகையில், ரியால்டோ நிறுவனம், பாட்டில் வடிவிலான இரண்டு கூடைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.
ஒரு கூடையில், 300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க முடியும். அவற்றை மறுசுழற்சி செய்யவும், அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்வாயிலாக, கடல் மாசு ஏற்படுவதை தடுப்பதுடன், கடற்கரையையும் துாய்மையாக வைத்திருக்க முடியும்.
இந்த கூடை, குழந்தைகளை கவரும் என்பதால், அவர்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என, அந்நிறுவனத்தினர் கூறினர்.