திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துணை முதல்வர் திறப்பு வைப்பு
தேனாம்பேட்டை மண்டலம், 116வது வார்டு டாக்டர் பெசன்ட் சாலையில், தொகுதி மேம்பாட்டு நிதி 2.35 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் கட்டப்பட்டது. இம்மையத்தை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.
தரைத்தளத்தில் தையல், ஆரி வேலைப்பாடு, அழகுக்கலை பயிற்சி; முதல் தளத்தில் கணிணி பயிற்சி, பட்டம் பெற்று வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தனி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும், 30 பேர் வீதம், 120 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை என, இரண்டு ‘ஷிப்ட்’ அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தையல் – ஆரி வேலைப்பாடுக்கு 390 மணி நேரம்; கணினி பயிற்சி 480 மணி நேரம்; அழகுக்கலை பயிற்சி 375 மணி நேரம் மற்றும் கணினி பயிற்சி மூன்று மாதம் வழங்கப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.