ஆஹா என்னப் பொருத்தம் தோனி-ஈடன் இந்தப் பொருத்தம்… * இன்று சென்னை-கோல்கட்டா மோதல்
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. தனது ராசியான மண்ணில் ‘தல’ தோனி சாதிக்கலாம்.
பிரிமியர் அரங்கில் ஐந்து கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை ஏமாற்றியது. 9 தோல்வியுடன் ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. எஞ்சிய போட்டியில் வென்றால், கடைசி இடம் பெறுவதை தவிர்க்கலாம்.
ராசியான ஈடன் கார்டன்
இன்று போட்டி நடக்கும் மேற்கு வங்கத்திற்கும் சென்னை கேப்டன் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்குள்ள கோரக்புர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நிறைய ஜூனியர் போட்டிகளில் விளையாடினார். சென் டிராபி பைனலில் ஷ்யாம்பஜார் கிளப் அணிக்காக காய்ச்சலுடன் விளையாடி கோப்பை வென்று கொடுத்தார். ஈடன் கார்டனில் இந்திய அணியின் கேப்டனாக இரண்டு டெஸ்ட் சதம் (144 ரன், எதிர், வெ.இ., 2011, 132 ரன், எதிர், தெ.ஆ., 2010) அடித்தார். இரு போட்டிகளிலும் இந்தியா வென்றது. இவரது மாமனார் குடும்பத்தினர், கோல்கட்டாவில் ‘செட்டில்’ ஆகியுள்ளனர். தவிர, இன்று மே 7ம் தேதி. தோனி 7.7.1981ல் ராஞ்சியில் பிறந்தார். இவருக்கு 7ம் எண் ராசியானது. 7ம் எண் பொறித்த ‘ஜெர்சி’ அணிந்து விளையாடுகிறார். இந்த 7ம் நம்பர் பொருத்தம், ஈடன் ராசி கைகொடுத்தால், சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.
2 ரன்னில் நழுவியது
கடந்த போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த இலக்கை (214), சென்னை அணி துணிச்சலாக விரட்டியது. ஆரம்பத்தில் இளம் ஆயுஷ் மாத்ரே 94 ரன் விளாசினார். யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் தோனி அவுட்டானதால், 2 ரன்னில் வாய்ப்பை கோட்டைவிட்டது. இதற்கான பொறுப்பை தோனி ஏற்றார். மாத்ரே, ரஷீத், சாம் கர்ரன், ஜடேஜா, பிரவிஸ், ஷிவம் துபே இன்று விளாச வேண்டும்.
பந்துவீச்சில் கலீல் அகமது, பதிரனா ரன்னை கட்டுப்படுத்தினால் நல்லது. ஈடன் கார்டன் ஆடுகளம் ‘ஸ்பின்னர்’களுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அனுபவ அஷ்வின் இடம் பெறலாம். நுார் அகமது, ஜடேஜாவும் ‘சுழல்’ ஜாலம் நிகழ்த்தலாம்.
ஒரு ரன்னில் வென்றது
கோல்கட்டா அணி கடந்த போட்டியில் ராஜஸ்தானை ஒரு ரன்னில் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ வாய்ப்பை தக்க வைக்க முடியும். ராஜஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய ‘ஆல்-ரவுண்டர்’ ரசல், ‘பார்மிற்கு’ திரும்பியது பலம். ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் தடுமாறுவது பலவீனம். கேப்டன் ரகானே, ரகுவன்ஷி, குயின்டன் நம்பிக்கை தருகின்றனர். ‘பினிஷிங்’ பணிக்கு ரிங்கு சிங் உள்ளார்.
நரைன், வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ‘சுழல்’ கூட்டணி மிரட்டலாம். ‘வேகத்தில்’ ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா கைகொடுக்கலாம்.
மழை வருமா
கோல்கட்டாவின் இன்று வெப்பமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவில், பனிப்பொழிவு பவுலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
யார் ஆதிக்கம்
பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 31 முறை மோதின. சென்னை 19, கோல்கட்டா 11ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* ஈடன் கார்டனில் 10 போட்டியில் மோதின. சென்னை 6, கோல்கட்டா 4ல் வென்றன.
* இம்முறை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, சென்னையை வீழ்த்தியது. இதற்கு இன்று பதிலடி கொடுக்கலாம்.
* ஈடன் கார்டன் மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. தரமான ‘ஸ்பின்னர்’கள் சாதிக்கலாம்.
‘விசில்’ பறக்கும்
பிரிமியர் தொடரில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவது சந்தேகம். இன்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் தனது கடைசி போட்டியில் விளையாடலாம். ரசிகர்கள் மஞ்சள் உடை அணிந்து, ‘விசில்’ சத்தம் பறக்க, வரவேற்பு அளிக்கலாம். இது பற்றி கோல்கட்டா தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறுகையில்,”இத்தகைய சத்தத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் வித்தை எங்களது வீரர்களுக்கு தெரியும்,”என்றார்.
எதிர்காலம்
பிரிமியர் அரங்கில் இருந்து இந்த சீசனுடன் தோனி, 43, ஓய்வு பெற வாய்ப்பு உண்டு. இது பற்றி சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,”தோனியிடம் நாங்கள் எதுவும் சொல்வதில்லை. ஏதாவது முடிவு எடுத்தால், எங்களிடம் சொல்வார். தனது எதிர்கால திட்டம் பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை.
சென்னை அணி இம்முறை சரியாக விளையாடவில்லை. ருதுராஜ் காயம் அடைந்தது, ஒரே நேரத்தில் பல வீரர்கள் ‘பார்ம்’ இழந்தது, வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அடுத்த முறை வலிமையாக மீண்டு வருவோம்,”என்றார்.
பயிற்சிக்கு ‘நோ’
தோனி தொடர்ந்து இரண்டாவது நாளாக பயிற்சிக்கு வரவில்லை. இவரை காண ஈடன் கார்டன் மைதானத்திற்கு நேற்று வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இடது முழங்கால் காயத்திற்கு 2023ல் ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட தோனி, கவனமாக செயல்பட்டு வருகிறார். இது பற்றி சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் கூறுகையில்,”தோனிக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. இன்றைய போட்டியில் விளையாடுவார்,”என்றார்.