வெற்றி ‘மழையில்’ குஜராத் அணி * அதிர்ஷ்டம் இல்லாத மும்பை
மழையால் பாதிக்கப்பட்ட பிரிமியர் போட்டியில் குஜராத் அணி, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்டிங் தேர்வு செய்தார். குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டார்.
ஜாக்ஸ் அரைசதம்
மும்பை அணிக்கு ரோகித் சர்மா, ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த ரிக்கிள்டன், அடுத்த பந்தில் சுதர்சனிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். ரோகித் சர்மா 7 ரன் மட்டும் எடுத்து அர்ஷத் கான் பந்தில் அவுட்டானார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய 5வது ஓவரில் சூர்யகுமார் 3 பவுண்டரிகள் அடிக்க, மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டன. இதன் பின் அணியின் ரன் வேகம் குறைந்தது. 10 ஓவரில் மும்பை அணி 89/2 ரன் எடுத்தது. இந்நிலையில் சாய் கிஷோர் வீசிய 11 வது ஓவரில் சிக்சர் அடித்த ஜாக்ஸ் அரைசதம் கடந்தார். இதே ஓவரில் சூர்யகுமார் (34) அவுட்டாகி திரும்பினார். மறுபக்கம் பந்தை சுழற்றிய ரஷித் கான், ஜாக்சை (53) அவுட்டாக்கினார்.
மீண்டும் வந்த சாய் கிஷோர், இம்முறை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை (1) அவுட்டாக்க, மும்பை அணி 106 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. திலக் வர்மா, 7 ரன் மட்டும் எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. தீபக் சஹார் (8), கரண் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஏமாற்றிய துவக்கம்
குஜராத் அணிக்கு சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்த சுதர்சன் (5), டிரன்ட் பவுல்ட் பந்தில் அவுட்டானார். வழக்கத்துக்கு மாறாக சுப்மன் (முதல் 20 பந்தில் 11 ரன்) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குஜராத் அணி 5 ஓவரில் 21/1 ரன் மட்டும் எடுத்தது. 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது, பட்லர் (30) அவுட்டானார். அடுத்து வந்த ரூதர்போர்டு 2 சிக்சர் அடிக்க, 14 ஓவரில் குஜராத் அணி 107/2 ரன் எடுத்து, வலுவான நிலையில் இருந்தது.
பும்ரா திருப்பம்
பின் மழை காரணமாக 15 நிமிடம் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கியதும் வேகத்தில் மிரட்டினார் பும்ரா. இவரது பந்தில் சுப்மன் (43) போல்டானார். பவுல்ட் பந்தில் ரூதர்போர்டு (28) அவுட்டானார். மறுபடியும் வந்த பும்ரா, ஷாருக்கானை (6) போல்டாக்கினார். மீண்டும் மழை குறுக்கிட, இம்முறை குஜராத் 18 ஓவரில் 132/6 ரன் எடுத்திருந்தது.
37 நிமிடத்துக்குப் பின் ஆட்டம் துவங்கியது. 19 ஓவரில் 147 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. இதனால் கடைசி 6 பந்தில் குஜராத் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன.
‘திரில்’ வெற்றி
தீபக் சஹார் பந்து வீசினார். முதல் இரு பந்தில் டிவாட்யா 5 ரன் (4, 1) எடுத்தார். 3வது பந்தில் கோயட்சீ, சிக்சர் (6) அடிக்க, கடைசி 3 பந்தில் 4 ரன் மட்டும் தேவைப்பட்டன. 4வது பந்தை சஹார் ‘நோ பாலாக’ வீச, 2 ரன் (1+1) கிடைத்தன.
மீண்டும் வீசப்பட்ட 4வது பந்தில் டிவாட்யா 1 ரன் எடுத்தார். 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 5வது பந்தை தேவையில்லாமல் உயரமாக அடித்து அவுட்டானார் கோயட்சீ (12). கடைசி பந்தில் அர்ஷத் ஒரு ரன் எடுக்க, குஜராத் அணி 19 ஓவரில் 147 ரன் எடுத்து வென்றது. தொடர்ச்சியாக 6 போட்டியில் வென்ற மும்பை அணிக்கு, இம்முறை அதிர்ஷ்டம் இல்லாமல் போக, கடைசி பந்தில் வீழ்ந்தது.
யாருக்கு ‘பிளே ஆப்’ வாய்ப்பு
பிரிமியர் தொடரில் இதுவரை 56 போட்டிகள் முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி 3 இடம் பிடித்த ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை அணிகள் கோப்பை வாய்ப்பை இழந்தன.
* குஜராத் (16), பெங்களூரு (16), பஞ்சாப் (15), மும்பை (14) அணிகள் ‘டாப்-4’ இடத்தில் உள்ளன. டில்லி (13), கோல்கட்டா (11), லக்னோ (10) அணிகள் 5, 6, 7 வது இடங்களில் உள்ளன.
* இதில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மீதமுள்ள 3 போட்டியில் ஏதாவது ஒன்றில் வென்றால் போதும், ‘பிளே ஆப்’ சென்று விடலாம்.
* மும்பை அணி இன்னும் இரண்டு போட்டியில் வெல்ல வேண்டும். ஒன்றில் மட்டும் வென்றால் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
* 5வது இடத்தில் உள்ள டில்லி, மீதமுள்ள 3 போட்டியில் குறைந்தது 2ல் வெல்ல வேண்டும். கோல்கட்டா அணி மீதமுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டும்.
* லக்னோ அணியை பொறுத்தவரை அடுத்த 3 போட்டியில் வென்றால் 16 புள்ளி பெறலாம். பின் மற்ற அணிகள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
12 முறை
‘டி-20’ கிரிக்கெட்டில் அதிக முறை 25 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்த வீரர்களில் சூர்யகுமார் (12 முறை) இரண்டாவது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் பவுமா (13) முதலிடத்தில் உள்ளார். தவிர பிராட் ஹாட்ஜ் (ஆஸி.,), ருடால்ப் (தெ.ஆப்.,), சங்ககரா (இலங்கை), கிறிஸ் லின் (ஆஸி.,), கைல் மேயர்ஸ் (வெ.இண்டீஸ்) தலா 11 முறை இதுபோல ரன் எடுத்துள்ளனர்.
510 ரன்
நேற்று 35 ரன் எடுத்த மும்பை வீரர் சூர்யகுமார், இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், இதுவரை 12 போட்டியில் 510 ரன் எடுத்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் பெங்களூருவின் கோலி (505), குஜராத்தின் சுதர்சன் (504) உள்ளனர்.