“இந்திய ராணுவத்துக்கு ஒரு ராயல் சல்யூட்”.. ஆபரேஷன் சிந்தூர் அதிரடியை பாராட்டிய விஜய்!
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு விஜய் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குறி வைத்து அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட்” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “போராளிகளின் சண்டை தொடங்கி விட்டது. வந்த வேலை முடியும் வரை நிறுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார். அதோடு, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்துள்ள அவர், ஒட்டுமொத்த நாடும் அவருடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.