“உங்களை நீங்களே “தற்காத்து கொள்ளுங்கள்”” பொதுமக்களுக்கு பழனிசாமி அறிவுரை

தி டிக்டேட்டர் என்ற ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., ஆட்சியில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பா.ஜ., பெண் நிர்வாகி சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை; திருப்பத்துார், கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு; சென்னை, வண்டலுார் கல்லுாரி வளாகத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை; கரூர் மாவட்டம், குளித்தலையில், 12ம் வகுப்பு மாணவன் கொலை, புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் ஜாதி மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு என, கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு, நேற்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கும், கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.

ஆனால், இது எதை பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என, நாளைக்கு ஒரு ‘வீடியோ ஷூட்’ எடுத்துக் கொண்டு வருவார் முதல்வர்.

தி டிக்டேட்டர் என்ற ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும், ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

‘என் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் நடக்கவில்லை’ என்று சட்டசபையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம்- – ஒழுங்கு பிரச்னைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.

‘ஆக, குற்றவாளிகள் கைது’ என்று சொல்வீர்களே, அதையாவது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வரை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே, இனியும் இந்த தி.மு.க., அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *