நீர் ஆவியாதல் அளவு குறைக்க முயற்சி பூண்டியில் இருந்து புழலுக்கு நீர்திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.
கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், ராட்சத குழாய்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் எடுத்து வரப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகள் மொத்தம், 13.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. சென்னை மக்களின் தாகம் தீர்க்க, மாதம் 1 டி.எம்.சி., நீர் தேவை,
தற்போது ஆறு ஏரிகளிலும் சேர்த்து, 8.30 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது.
இதில், அதிகபட்சமாக, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், 2.87; 3.64 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 2.43; 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில், 1.82 டி.எம்.சி.,யும் நீர்இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியை சுற்றிய பகுதியில் கத்திரி வெயில், வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால், நீர் ஆவியாதல் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, அங்குள்ள நீரை, பேபி கால்வாய் வாயிலாக, புழல் ஏரிக்கு அனுப்பும் பணியை நீர்வளத்துறை துவக்கி உள்ளது.
வினாடிக்கு 407 கனஅடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால், புழல் ஏரிக்கு வினாடிக்கு, 297 கனஅடி நீர் வரத்து கிடைத்தது.