அடிச்சு தூக்கும் தமிழக அரசு.. ஐந்தாம் ஆண்டில் திராவிட மாடல்! அள்ளி குவித்த விருதுகள் பட்டியல்!

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனைகளுக்காக இதுவரை எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் புகழ மத்திய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளதாக தமிழக அரசு பெருமுதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கும் நிலையில் தமிழக அரசு பெற்ற விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்திவரும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன; காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம், முதலானவை இந்திய நாடு கடந்து, அயல் நாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கொரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல் மழை வெள்ளக் கொடுமைகள். கரம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசின் பாராமுகம். அது அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் காத்து எல்லாருக்கும் எல்லாம் என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார்கள்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் எனப் பாராட்டப்பட்டபோது, எனக்குப் புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை என்று கூறிப் பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் நம் மாண்புமிகு திராவிட நாயகர் அவர்கள் !

இன்று தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர்; மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள். தொழில் முகவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்: பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஒன்றிய அரசே தமிழ்நாட்டு அரசைப் பாராட்டி எராளமான விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும் நமக்கும் பெருமையையும். பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.

அந்த ஒன்றிய அரசின் பாராட்டுப் பட்டியலில் இதோ சில:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution 3.11.2021 அன்று வழங்கிய ISO 270001 : 2013 சர்வதேசத் தரச் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப. அவர்கள் புதுடெல்லியில் 30.11.2024 அன்று நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் FICCI Turf 2024 14வது சர்வதேச விளையாட்டுக் கருத்தரங்கில் 2024ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு வழங்கிய விருதை 4.12.2024 அன்று காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் 6.12.2021 அன்று வழங்கப்பட்ட விருது!

ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 8.12.2021 அன்று மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்காக வழங்கிய தேசிய விருது!

13.12.2021 அன்று மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகள்! சிறந்த நீர் மேலாண்மைக்காக 29.3.2022 அன்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கான விருது !

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதி நிறுவனங்களின் சேவையைப் பாராட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் 25.4.2022 அன்று வழங்கிய சிறந்த ஏற்றுமதியாளர் விருது!

தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டின் 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் 11.5.2022 அன்று வழங்கிய விருது !

மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்வதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் என 27.6.2022 அன்று வழங்கப்பட்ட ஒன்றிய விருது இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் ஒன்றாக குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்காக விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த பங்களிப்பிற்கு 1.7.2022 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவிலான முதல் பரிசு. சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு 2.10.2022 அன்று வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் விருது. !

இந்தியாவில் தூய்மையைப் பராமரிப்பதில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டிற்குத் தேசிய அளவில் மூன்றாவது பரிசாக 2.10.2022 அன்று தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களிடம் குடியரசுத் தலைவர் வழங்கிய விருது !

ஜல்சக்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி முதலிடம் பெற்றமைக்காக 2.10.2022 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய தேசிய விருது!

ஒன்றிய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்தி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டதிற்கு 13.12.2022 அன்று வழங்கப்பட்ட விருது.!

ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேசச் சுற்றுலா சந்தையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இராமச்சந்திரன் அவர்களிடம் 8.3.2023 அன்று வழங்கப்பட்ட இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சகத்திற்கான பட்வா சர்வதேசப் பயண விருது!

கடற்கரை முகப்புப் பகுதி மேம்பாட்டுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டமைக்காக 28.3.2023 அன்று வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சக விருது! காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி வாரணாசியில் 6.4.2023இல் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்!

காகிதம் இல்லாச் சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியமைக்காக ஒன்றிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் 3.7.2023 அன்று வழங்கிய விருது!

புதுடெல்லி பிரகதி மைதானத்தில் 20.11.2023 அன்று நடைபெற்ற உலக உணவுத் திருவிழாவில் – பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது !

திருவைகுண்டம் அணைக்கு உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புக்காக 21.11.2023 அன்று வழங்கப்பட்ட சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணைய விருது ! புதுடெல்லியில் குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 30.1.2024 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்ற விருது ! ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தேசிய அளவில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறன் கொண்ட தருமபுரி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 14.8.2024 அன்று வழங்கிய முதல் பரிசு ! மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐ.நா.அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான யுனைடெட் நேஷன், இண்டர்ஏஜென்சி டாஸ்க் (United Nation Interagency Task Force Award Smart Porche Award) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்துப் பெற்றார் ஐ.நா. பிரகடனப்படி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய அளவில் சிறந்த வங்கிச் சேவைக்காக 26.11.2024 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களிடம் வழங்கிய விருது ! 29.11.2024 அன்று புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 43-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியின். “2047-இல் இந்தியா” என்ற கருப்பொருள் விளக்கக் காட்சிப்படுத்தலைச் சிறப்பாக அமைத்தமைக்காக தமிழ்நாடு அரங்கிற்கு வழங்கப்பட்ட மூன்றாம் விருது ! திருவாரூர் முத்துப்பேட்டை காவல் நிலையம், 2024-ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய விருது. 25.4.2025 அன்று 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை தேசிய விருது! இவைபோல, ஒன்றிய அரசு வழங்கிய பல்வேறு விருதுகளுடன் தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டிப் வழங்கியுள்ளன. விருதுகளை இவைமட்டுமல்லாமல் பல்வேறு பத்திரிகை நிறுவனங்களும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியைப் பாராட்டி மிகப்பல விருதுகளை வழங்கியுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு நான்காண்டு கால ஆட்சியில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகளுக்காக இதுவரை எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் பாராட்டும் வண்ணம், ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுப் பட்டியலைக் காணும்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மிகச் சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் எனப் பலரும் மகுடம் சூட்டுவது நமது தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *