‘தன்னை உணரும் நிலை தான் சிவனை உணரும் நிலை’

”தன்னை உணரும் நிலை தான், சிவனை உணரும் நிலை,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி, அரங்க மகாதேவன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த, சைவசித்தாந்த மாநாட்டில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசியதாவது:

இந்த உலகம், 360 டிகிரி எனும் பாகைகள் கொண்டது. இதை, 12 கூறுகளாகவும், 3.87 டிகிரியாகவும், 27 நட்சத்திரங்களாகவும் கணக்கிட்டு, அணுக்கதிர் தத்ததுவத்தைக் கூறி, அதுவே, இந்த உலகத்தை இயக்கும் என்று உரைத்த விஞ்ஞானமே சைவ சமயம்.

அணுக்கதிர் தத்துவத்தின் ஆற்றலை உணர்த்துவது தான் சிதம்பரம் நடராஜரின் நடனம்.

தன்னை அறிந்தால்

தமிழ் என்பது வெறும் மொழியல்ல; அது சிவம். அந்த சிவனின் ஆற்றலையும், பராக்கிரமங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதுடன், அவரின் உன்னதத்தையும் காட்டி, ஓங்கி உயர்ந்து நிற்கிறது தமிழ் மொழி.

தமிழையும், சிவத்தையும் உணரச் செய்பவையே திருமுறைகள். அதனால் தான், ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என்றார் திருமூலர்.

அண்ட சராச்சரங்களையும் தன்னுள் அடக்கியது சிவம். அந்த சிவத்தை உரைக்க, உலகத்தின் ஆகப்பெரும் தத்துவங்களை உள்ளடக்கி நிற்கிறது சைவம். சிவத்திலிருந்து உருவாகி, மீண்டும் சிவத்தையே அடையம் தத்துவத்தை உரைப்பது தான் சைவம்.

சிவனடியார்களால் அருளப்பட்ட திருமுறைகள், இந்த மண்ணில் ஆகச் சிறந்த இடங்களாக அறியப்பட்ட தலங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.

அந்த திருமுறைகளை தந்த அருளாளர்கள், இந்த உலகில் எல்லாமும் சிவனே என்று எளிமையாக்கித் தந்தனர். அனைத்தையும், தன்னைப்போலவே நினைத்துப் பார்ப்பது தான் சிவ தத்துவம். தன்னை அறிந்தால், எல்லாம் தானாக வந்து சேரும். தன்னை அறிந்தவன் தன்னிலிருந்து விலகி நிற்பான்.

தன்னிலிருந்து விலகி நிற்பவன், தனக்கு எதிரில் இருக்கும் அனைத்தையும் தன்னைப் போலவே உணர்வான். அதுவே இறைநிலை எனும் சிவநிலை.

உணர்ந்து படிக்கணும்

லிங்கத்தின் உட்பொருளை உணர்ந்தவரின் முன், ‘எண் குணத்தான்’ எனும் இறைவன் வந்து நிற்பான். சிவனை உணர்வதற்கு சிவனடியார்கள் எழுதிய நுால்களை உணர்ந்து படிக்க வேண்டும். சிவனைப்பாடும் இடத்திற்கு, 12 திருமுறைகளும் வந்து நிற்கும்.

எல்லாம் வல்ல இறைவனின் பெருமைகளையும் சக்தியையும், தமிழால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் செயலை செய்தவர்கள் அறிஞர்களும் சித்தர்களும். அவர்கள் செய்த பணிகளையே, தற்போது தருமை உள்ளிட்ட ஆதீனங்கள் செய்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *