மாசு கட்டுப்பாட்டு வாரிய அலட்சியத்தால் மீண்டும் ஆபத்து: பகிங்ஹாம் கால்வாயில் படரும் ஆயில் கழிவு
திருவொற்றியூர், எண்ணுார் பகுதிகளில், இரண்டு நாட்களாக பகிங்ஹாம் கால்வாயில் பல கி.மீ., துாரம் எண்ணெய் கழிவு படர்வதால் கால்நடைகள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தோல்நோய், தொற்று பாதிப்பு ஏற்படுமோ என, மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவை தடுக்காமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியமாக இருப்பதே, மீண்டும் மீண்டும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையின் முக்கிய ஏரிகளாக விளங்கும் புழல், – பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், 42 கி.மீ., பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக எண்ணுார் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.
கடந்தாண்டு டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயலால் அதிகப்படியான மழைநீர் கொட்டி தீர்த்தது. அதனால், புழலில் இருந்து, 3,000 கன அடி, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, 45,000 கன அடி என, வினாடிக்கு, 48,000 கன அடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் அதிகப்படியான தண்ணீர் ஓடியதால், வெள்ளநீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் பகிங்ஹாம் கால்வாய் நிரம்பி வழிந்து, அதை ஒட்டிய திருவொற்றியூர், எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது, வெள்ள நீரை வெளியேற்றியபோது, எண்ணெய் நிறுவனங்களில் இருந்து முதல் முறையாக எண்ணெய் கழிவும் கலந்து வெளியேறியது.
திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் எட்டு கிராமங்கள் மற்றும் எண்ணுாரின் முகத்துவாரம் முழுதும் பாழாகிபோனது.
மீனவர்களின் வலைகள், படகுகள், இன்ஜின் உள்ளிட்டவற்றில் எண்ணெய் கழிவு படர்ந்ததால், அனைத்தும் நாசமாயின.
முகத்துவாரம், அலையாத்தி காடுகளில் வசித்த, நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டன. நண்டு, இறால், மீன்கள் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டது.
பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படிந்ததால் அவற்றால் பறக்க முடியாமல் தவித்தன. தன்னார்வலர்கள், அரசு தனி கவனம் செலுத்தி, பறவைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுத்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின், கால்வாயில் எண்ணெய் கழிவு கலக்காமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பகிங்ஹாம் கால்வாயில் எண்ணெய் கழிவு படர்வது தொடர்கிறது.
இரண்டு நாட்களாக எர்ணாவூரிலிருந்து எண்ணுார் முகத்துவாரம் வரை, பகிங்ஹாம் கால்வாய் அடர்த்தியான மஞ்சள் நிற கழிவுடன், எண்ணெய் கழிவும், பல கி.மீ., துாரம் படர்ந்துள்ளது.
இறை தேடி கால்வாய்க்கு வந்த கொக்கு, நாரை, கூழைக்கிடா மற்றும் வெளிநாட்டு பறவைகள், பெரிதும் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடை வெயில் கொளுத்தி வருவதால், சூட்டை தணிக்க கால்வாயில் இறங்கி குளியல் போடும் ஆடு, பசு, எருமை மாடுகளின் மீது, எண்ணெய் படலங்கள் ஒட்டியுள்ளன.
கால்வாய் கரை புற்கள் மீதும் எண்ணெய், மஞ்சள் கழிவு படர்ந்திருப்பதால், அவற்றை உண்ணும் மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது; நீர்வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
இதன் தாக்கம், பகிங்ஹாம் கால்வாயுடன் முடியாமல், எண்ணுார் முகத்துவாரம், கழிமுகம், அலையாத்தி காடுகள் வரை நீண்டுக் கொண்டே செல்கிறது.
இதனால், தோல் நோய், தொற்று நோய் பாதிப்பு ஏற்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எண்ணெய் கழிவுகளை வெளியேற்றும் நிறுவனம் மீது, மாசு கட்டுபாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.