2026ல் கூட்டணி ஆட்சி: அ.தி.மு.க., – பா.ஜ., பேச்சு
பா.ம.க., நாம் தமிழர், தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் சேர, தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி என அறிவிக்கும்படி, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ஜ., தலைமை பேசி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்துப் பேசிய பின், ‘தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்’ என, அமித் ஷா அறிவித்தார். அதன்பின் சென்னை வந்த அமித் ஷா, பழனி சாமியுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, ”2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்,” என்றார்.
அதைத் தொடர்ந்து, கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.க., ஒப்புக்கொண்டதாக, தகவல் பரவியது. இதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுத்தார். ‘அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றுதான் அமித் ஷா கூறினார். அதை தவறாக சித்தரிக்கின்றனர். கூட்டணி ஆட்சி’ என்று அவர் கூறவில்லை என, விளக்கம் அளித்தார்.
ஏற்கனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பா.ம.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும், பா.ஜ.,வுடன் மறைமுகமாக பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி ஆட்சிக்கு, அ.தி.மு.க., சம்மதம் தெரிவித்தால், பா.ம.க., – தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தே.ஜ., கூட்டணிக்கு வந்துவிடும் என, பா.ஜ., கருதுகிறது. இதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவித்து, அவரை சம்மதிக்க வைக்க, பா.ஜ., தலைமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு, இன்று இரவு வரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அ.தி.மு.க., தலைமையிடம், கூட்டணி ஆட்சி குறித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.