மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 2023 – 24ல், 8,290 கோடி யூனிட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் வாங்கியுள்ளது.

இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். இந்த ஆண்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உத்தேசமாக ஒப்புதல் பெற்றதைவிட, 13,179 கோடி ரூபாய்க்கு 917 கோடி யூனிட் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது.

உத்தேச வருவாய்


தமிழக மின் தேவையை, மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வாயிலாக, பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மின்சாரம் வாங்கப்படுகிறது.

இதுதவிர, நெருக்கடியான காலங்களில், மின்சார சந்தையில் இருந்தும், குறுகிய கால மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த, 2022 செப்டம்பரில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்காக, 2022 – 23 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தனித்தனியே, உத்தேச வருவாய், செலவு போன்றவற்றை உள்ளடக்கிய மொத்த வருவாய் தேவை அறிக்கையை, மின்வாரியம் 2022ல், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அதில், 2023 – 24ல், 42,575 கோடி ரூபாய்க்கு, 7,373 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டின், ‘ட்ரூ அப்’ எனப்படும், வருவாய், செலவு தொடர்பாக, உண்மையில் மேற்கொள்ளப்பட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்து, மின்வாரியம் ஒப்புதல் கேட்டுள்ளது.

சூரியசக்தி


இதை பரிசீலித்த ஆணையம், ஒப்புதல் அளிக்கப்பட்ட, ‘ட்ரூ அப்’ அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், 2023 – 24ல் மத்திய தொகுப்பு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 8,290 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். அதில் மின்சாரத்தை எடுத்து வந்த மின்வழித்தட செலவு, 7,624 கோடி ரூபாய்.

அதாவது, 2023 – 24ல், 42,575 கோடி ரூபாய்க்கு, 7,373 கோடி யூனிட் வாங்கப்படும் என, உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததைவிட, கூடுதலாக, 917 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதனால், 13,179 கோடி ரூபாய் கூடுதல் செலவாகி உள்ளது. அந்த ஆண்டில், மத்திய தொகுப்பில் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம் சராசரி யாக, 4.93 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.பி., எனப்படும் மின் வாரியத்திற்கு மட்டும், மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, யூனிட் சராசரியாக, 6.94 ரூபாய்க்கும்; சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் யூனிட், 6.94 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுஉள்ளது.

அதிகபட்சமாக, சர்க்கரை ஆலைகளில் உள்ள இணை மின் நிலையங்களில் யூனிட், 9.69 ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளது. குறுகிய கால மின் கொள்முதலில் யூனிட், 9.56 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *