சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்த , 5, 8ம் வகுப்பில் மார்க் குறைந்தால் ‘பெயில்’
ஐந்து மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது. ‘எங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிக்கிறேன்’ என, பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, ‘பெயில்’ ஆக்கக்கூடாது என்ற நடைமுறை, இதுவரை அமலில் இருந்தது.
தேசிய கல்விக் கொள்கை 2020ல், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், தேர்ச்சி சதவீதத்தை விட குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை, ‘பெயில்’ ஆக்கலாம். இந்த நடைமுறை, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்விபரத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களின் சம்மத கடிதம் பெறப்படுகிறது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகம், இந்தாண்டு ஜனவரி, 15ல், பழைய கட்டாய கல்வி சட்டத்தின், 16, 38ம் விதிகளில் இருந்த, ‘கட்டாய தேர்ச்சி’யை திருத்தியது.
இதுகுறித்த கடிதத்தை, மார்ச் 18ம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பியது. இந்த ஆண்டு முதல், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறாவிட்டால், ‘பெயில்’ ஆக்க வேண்டும். அதை பெற்றோருக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என, மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படியே, கடிதத்தில் கையெழுத்து பெற்று வருகிறோம். அதேநேரம், சராசரியை விட குறைவான கற்றல் திறன் உள்ள மாணவர்களுக்கு, தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி, அதில் வாய்ப்பு வழங்க வேண்டும் என, அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மட்டுமே, அதே வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெற்றோர் கூறுகையில்,”பள்ளி நிர்வாகம் கேட்பதால், அனைத்து பெற்றோரும் சம்மத கடிதம் கொடுக்கின்றனர். தனியார் பள்ளி என்பதால், சம்மதம் இல்லை என்று தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, தனியார் பள்ளிகள், மதிப்பெண் குறைவாக வாங்கும் குழந்தைகளை, வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது,” என்றனர்.