யார் மீதும் வன்மம் இல்லாதவர் கிரேசி மோகன் நடிகர் கமல் புகழாரம்
”யார் மீதும் காழ்ப்போ, வன்மமோ இல்லாதவர் கிரேசி மோகன்,” என, கமல் பாராட்டினார்.
அல்லயன்ஸ் கம்பெனி பதிப்பித்த, கிரேசி மோகனின், 25 நுால்களை, நடிகர் கமல் வெளியிட, ரவி அப்பாசாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், கமல் பேசியதாவது:
என் படங்களுக்கு வசனம் எழுதிய பின், கிரேசி மோகன் பிரபலமானதாக பலரும் பேசினர். சிலர், பார்த்ததும் பிடித்தது என்பது போல, எனக்கு படித்ததும், பிடித்து போனவர் கிரேசி மோகன். ஒரு விளக்கு இருப்பதை, இன்னொரு விளக்கு பிடித்து காட்ட தேவைஇல்லை.
நகைச்சுவை
நான் அவரை அறிமுகப்படுத்தாவிட்டால், என்னை விட பெரியவர் ஒருவர் அறிமுகப்படுத்தி இருப்பார்.
அவர் சொர்க்கத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அவருடன் இருந்ததே சொர்க்கத்தில் இருப்பது போன்றது தான். உயிர், சோப் மாதிரி கரைய வேண்டும் என்பார். அப்படித்தான் கரைந்து போனார்.
நாங்கள் சகோதரர்கள் போலவே வாழ்ந்தோம். நாங்கள் பேசுவதை யாராவது பார்த்தால், எங்களை கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய ஆட்கள் என்பர். அப்படி, மணிக்கணக்காக இலக்கு இல்லாமல் பேசி உள்ளோம்.
அவர் யார் மீதும் வன்மமோ, காழ்ப்போ கொண்டு பேசாதவர். அவர், பிறரை பற்றி பேசினால், நகைச்சுவைக்காகவே பேசுவார்.
என் இறை மறுப்பையும், அவருடைய ஆன்மிகத்தையும், நாங்கள் விமர்சித்தது இல்லை. இருவரும் இருவருடைய கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்டோம்.
அந்த கருத்துக்களால், எங்களை நாங்கள் கத்தியை சாணை பிடிப்பது போல, கூர் தீட்டிக் கொண்டோம். இதில், யார் சாணை, யார் கத்தி என்பது தெரியாது. அவருடைய நுால்கள் இன்று வெளியிடப்படுவது, அடுத்த தலைமுறைக்கு பயன் அளிக்கும்.
இவ்வாறு கமல் பேசினார்.
வாழ்த்து
இயக்குநர், கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
கிரேசி மோகன், இரவு முழுதும் எழுதக்கூடியவர். ஒவ்வொரு ஆண்டும் மே, 30ம் தேதி எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வார். அவர் மனைவிக்கும், அதே நாளில் பிறந்த நாள்.
அதனால், நாங்கள் இருவரும், ‘விஷ் தி சேம்’ சொல்லிக் கொள்வோம். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதை போல, மாது பாலாஜி, கிரேசி மோகனுக்கு கிடைத்த நல்ல தம்பி. அவரால்தான் இந்த நுால்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், நடிகர் ஜெயராம், அல்லயன்ஸ் சீனிவாசன், மாது பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.