நடிகர் விஜய் கார் பவனி: மதுரை போலீஸ் தடை
த.வெ.க., தலைவர் விஜய், மதுரையில் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து கார் பவனி வரப்போவதாக பரவிய செய்தியைத் தொடர்ந்து, போலீசார் டென்ஷன் ஆனார்கள்.
அனுமதி இல்லாமல், நடிகர் விஜய் மதுரையில் கார் பவனி நடத்தி, பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது; மீறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரித்தார்.
த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் அந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக, நடிகர் விஜய் நேற்று சென்னையில் இருந்து மதுரை வழியாக கொடைக்கானல் சென்றார்.
முன்னதாக, தனி விமானம் வாயிலாக மதுரைக்கு வரும் நடிகர் விஜய், தொண்டர்களுக்காக, மதுரையில் கார் பவனி செல்லப் போவதாக தகவல் பரவியது. அதனால், விஜயை காண்பதற்காக, மதுரை மற்றும் சுற்றிலும் இருக்கும் மாவட்டங்களில் இருந்து த.வெ.க., தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் நேற்று காலை மதுரைக்கு வந்தனர்.
இது மதுரை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், உஷாரான மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், விஜய் அனுமதியின்றி கார் பவனி நடத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு, நேற்று மாலை 3:40 மணிக்கு, தனி விமானத்தில் மதுரை வந்தார் விஜய்.
விமான நிலைய வாயிலுக்கு வந்த விஜயை பார்க்க கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் முண்டியடிக்க, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், வேன் ஒன்றின் வாயிலாக விஜய், கொடைக்கானல் புறப்பட்டுச் செல்ல, போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.