மேம்பாலத்திற்கு இடையூறான மரங்களை அகற்ற வலியுறுத்தல்
வேளச்சேரி – பரங்கிமலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், பூங்கா, நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், பூச்செடிகள், உயரம் குறைவான மர வகைகள் நடப்பட்டு உள்ளன. இதன் கிளைகளை வெட்டி, அவ்வப்போது பராமரிக்கப்படுகிறது.
ஆனால், மூன்று ஆல மரங்கள் 30 அடிக்கு மேல் வளர்ந்துள்ளன. இவை, மேம்பாலத்தை உரசி, அதற்கு மேல் வளர முடியாமல் வளைந்து நிற்கின்றன.
மரம் பெரிதாக வளரும்போது, மேம்பாலத்தில் விரிசல் விழுந்து, அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஒரு மரத்தின் கிளைகள் வளைந்து, தண்டவாளத்தை நோக்கி செல்கின்றன. ரயில் போக்குவரத்து துவங்கும்போது, ஆலமரத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அப்போது, மரத்தின் பிரதான கிளைகளை வெட்டும்போது, மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், மூன்று ஆல மரங்களையும் வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.
காலம் தாழ்த்தினால், மரம் பெரிதாக வளர்ந்து, அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடியாத நிலை ஏற்படும் என, அவர்கள் கூறினர்.