டிஜிட்டல் முறையில் ‘பார்க்கிங்’ கட்டணம் மாநகராட்சி அறிவுறுத்தல்

டிஜிட்டல் முறையில் ‘பார்க்கிங்’ கட்டணம் மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு வாகன நிறுத்த கட்டணத்தை, ‘டிஜிட்டல்’ முறையில் செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னையில், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம உள்ளிட்ட 10 இடங்களில், வாகன நிறுத்தம் உள்ளது.

தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அந்நிறுவன ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு, இருசக்கர வாகனங்களுக்கு – 5 ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு – 20 ரூபாய்; பேருந்து மற்றும் வேன்களுக்கு – 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில், ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி, வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், க்யூ.ஆர்., கோடு வாயிலாக, ரசீதின் உண்மைத்தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்படும். கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள், தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகத்தின் அடையாள அட்டை மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும்போது, பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக, 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘பயோ சி.என்.ஜி., – வேஸ்ட் டூ எனர்ஜி’

விரைவில் செயல்படும்: மேயர் பிரியா

சென்னை, மே. 2-

உழைப்பாளர்கள் தினத்தையொட்டி, துாய்மை பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை பாராட்டி, சென்னை மாநகராட்சி ‘அம்மா’ மாளிகை அரங்கத்தில், மேயர் பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின், மேயர் பிரியா அளித்த பேட்டி:

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு ‘தாட்கோ’ வங்கி வாயிலாக, பிரத்யேக அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, துாய்மை பணியாளர்கள், பணியின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மட்டுமல்லாமல், தனியார் துறையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களும், இதனால் பயன் பெறுவர். இதற்காக மண்டல வாரியாக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, 11,000 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

முதல்வர் அறிவுறுத்தல்படி, ‘பயோ சி.என்.ஜி., – வேஸ்ட் டூ எனர்ஜி’ திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது, குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் காஸ் தயாரித்து உபயோகப்படுத்தப்படும்.

இதன் வாயிலாக குப்பை தேக்கம் குறைவதுடன், அங்கு உருவாகும் நச்சு வாயுக்கள் வெளியே வராத வகையில், கொடுங்கையூரில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின், துாய்மை பணியாளர்களுடன் சேர்ந்து, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், மட்டன் பிரியாணி சாப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *