எல்லை சாலைப்பணி ரூ. 2,689 கோடியில் துவக்கம்
சென்னை எல்லை சாலைப்பணி திட்டத்தில், திருவள்ளூர் புறவழிச்சாலை – ஸ்ரீபெரும்புதுார் வரையிலான, 2,689.74 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று துவக்கி வைத்தார்.
– சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வு காணவும், பிற மாவட்டங்களில் இருந்து எண்ணுார் துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும், சென்னை எல்லை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இச்சாலை, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, மாமல்லபுரம் வரை, 132.87 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இந்த சாலைப் பணி நடந்து வருகிறது.
சாலையின் மூன்றாவது பகுதியான, திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை, 30.10 கி.மீ., நீளத்திற்கு, 2,689.74 கோடி ரூபாயில், புதிய ஆறுவழிச்சாலை மற்றும் இருபுறமும் இரு வழிகளுடன் அணுகு சாலையும் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, எல் அண்ட் டி நிறுவனம்; ஆர்.ஆர். இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம்; ஓரியன்டல் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வரையிலான சாலை பணி துவக்க விழா, நேற்று காலை நடந்தது. பணிகளை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
விழாவில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மு.நாசர், சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் பாஸ்கர பாண்டியன், தலைமை பொறியாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.