ராமானுஜர் கோவில் தேரோட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் கோவிலில் நேற்று, தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், தானுகந்த திருமேனியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா, ஏப்., 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான நேற்று, தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர், தேரடி, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா, கோவிந்தா’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர். ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். தேருக்கு முன் சென்ற ராமானுஜர் கோவில் யானை கோதையிடம் ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.