9ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் வசமாக சிக்கினார்
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, தியாகி சொக்கலிங்கம் தெருவில், மருத்துவம் படிக்காமலேயே பெண் ஒருவர், மருத்துவம் பார்த்து வருவதாக, திருவள்ளூர் கலெக்டருக்கு புகார் சென்றது.
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, மருத்துவ துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பூந்தமல்லி மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு தலைமையில், நேற்று அந்த பெண் நடத்தி வந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சென்றனர்.
அதில் ஒரு மருத்துவர், வயிற்று வலியால் துடிப்பது போல் நாடகமாடி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பெண் மருத்துவர், வயிற்று வலியால் துடித்த நபருக்கு ஊசி போட முயன்றார். அப்போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், நசரத்பேட்டையைச் சேர்ந்த எஸ்தர், 35, என்பதும், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கை பூட்டி ‘சீல்’ வைத்து, எஸ்தரை நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிறையில் கணவர்
விசாரணையில், எஸ்தரின் கணவர் சார்லஸ், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து கைது செய்யப்பட்டதும், தற்போது நசரத்பேட்டையில் ‘சீல்’ வைக்கப்பட்ட கிளினிக், அவரது பெயரிலேயே இயங்கி வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எஸ்தரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.