ஆண்கள் ஓட்டினால் ‘பிங்க்’ ஆட்டோ பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை
‘பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்’ என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.
சென்னையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக, பெண்களே ஓட்டும் வகையிலான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, சென்னையில் அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக, பெண்களுக்கு பயிற்சி அளித்து, மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்டோக்களை பெரும்பாலும் ஆண்களே ஓட்டுவதால், பெண்கள் பயணிக்க அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவதால் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை கலெக்டர் லட்சுமி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
சமூக நலத்துறை குழு நடத்திய ஆய்வில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, ஆர்.டி.ஓ.,க்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும் விதி மீறி ஆண்கள் ஓட்டிய இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இளஞ்சிப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு, லட்சுமி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.