வரதட்சணை கொடுமை வழக்கில் தீர்ப்பு லண்டன் பேராசிரியர், பெற்றோருக்கு சிறை

வரதட்சணை கொடுமை வழக்கில், சென்னையைச் சேர்ந்த லண்டன் பேராசிரியர் மற்றும் அவரது பெற்றோருக்கு, தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி, 24. இவர், நியூசிலாந்து குடியுரிமை பெற்றவர். கடந்த 2008ல், வரன் தேடும் இணையதளம் வாயிலாக, லண்டனில் பேராசிரியராக பணிபுரியும், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விமலேஸ்வரன், 34, என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின்போது, சாருமதி வீட்டார், சீர் வரிசையாக 70 சவரன் நகைகள், மாப்பிள்ளை விமலேஸ்வரனுக்கு தங்கத்தில் கழுத்து மற்றும் கை செயின், வைர மோதிரம், 1 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளனர். ஆனால், விமலேஸ்வரன், அவரது தாய் தையல் நாயகி, 73, தந்தை சந்தான கிருஷ்ணன், 79, ஆகியோர், கூடுதலாக வரதட்சணை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2011ல் சாருமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், விமலேஸ்வரன் விவாகரத்து கேட்டு, சாருமதிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து, அந்த ஆண்டில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாருமதி புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் வரதட்சணை தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு, சென்னை சைதாப்பேட்டை, 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், விமலேஸ்வரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும், சாருமதிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் செலுத்த வேண்டும் என்றும், விமலேஸ்வரனின் பெற்றோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *