சித்திரை கிருத்திகை விழா குன்றத்துாரில் திரண்ட பக்தர்கள்
குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது.
இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைதோறும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.
இந்நிலையில், நேற்று சித்திரை மாத கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை சேர்ந்து வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
கோடை வெயிலை சமாளிக்க, கோவில் படிக்கட்டு பாதை, மலை வழி பாதையில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
மேலும், கோடை காலத்தை முன்னிட்டு, தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு, கோவில் அறங்காவலர் குழு சார்பில், காலை முதல் மாலை வரை இலவசமாக மோர் வழங்கப்பட்டது.