சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது;
சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது; உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
‘சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்ததை மீட்டெடுக்க, அசல் பிம்பத்தை மீண்டும் பெற அதன் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது.
திருநெல்வேலியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் 2007 முதல் 2009 வரை தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச்சதி செய்து ரூ.2 கோடி கடன் வழங்கியதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. இவ்வழக்கில் பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரத்திற்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் அம்மாமுத்து, செண்பகமூர்த்தி, சிவசுப்பிரமணியம், ஆழ்வார் சிவ சுப்பிரமணியம், ராமலட்சுமி, சண்முகவேலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம் 2019 ல் உத்தரவிட்டது. ஐந்து பேரை விடுதலை செய்தது.
தண்டனையை எதிர்த்து பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ., தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மனுதாரர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சி.பி.ஐ., இந்நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பு. அதன் மீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். கடும் பிரச்னை எழும்போதெல்லாம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேர்மையானவர்கள் என நுாறு சதவீதம் மக்கள் நம்புகின்றனர். சி.பி.ஐ., விசாரணை கோரி மக்கள் உரத்த குரல் எழுப்புகின்றனர். பாரபட்சமின்றி தங்கள் கடமையை சி.பி.ஐ., அதிகாரிகள் செய்வார்கள் என நம்புகின்றனர்.
தற்போது சி.பி.ஐ.,யின் பணி கலாசாரம், அவர்களின் தலைகீழ் சரிசமமற்ற விசாரணைக்காக அனைவராலும் விமர்சிக்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேண்டுமென்றே பிரதான குற்றவாளிகளை தவிர்த்துவிட்டு, சிலர் மீது மட்டுமே வழக்கு பதிவு மற்றும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். பல வழக்குகளில் வேறுபட்ட அளவுகோல்களை பின்பற்றுகின்றனர்.
பெரும்பாலான வழக்குகளில், வலுவான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், உயர்மட்ட அதிகாரிகளை வழக்கிலிருந்து நீக்கிவிட்டு கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிகளாக சி.பி.ஐ., முடிவு செய்கிறது. பல வழக்குகளில் கையெழுத்து நிபுணர் மற்றும் பிற அறிவியல் நிபுணர்களின் கருத்தைக்கூட சி.பி.ஐ., பெறவில்லை.
பல வழக்குகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஒரு வழக்கில், சி.பி.ஐ., அதிகாரி லஞ்சம் கேட்டதை நிரூபிக்க ஒருவர் மின்னணு சாதன ஆதாரங்களை சமர்ப்பித்தார். அந்த அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கையை துவக்கியது. இது வெறும் ஒரு துளி மட்டுமே.
இது சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது.
சிறப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் நேர்மையானவர்கள், பாரபட்சமற்றவர்கள், அவர்களின் நடத்தை தாய்ப்பாலை போல துாய்மையாக இருக்க வேண்டும் என நீதிமன்றங்களை விட மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.
சி.பி.ஐ.,அதிகாரிகள் தங்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் இருப்பதாகவும், அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் கருதுகின்றனர். சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அசல் பிம்பத்தை மீண்டும் பெறுவதற்காக, தங்கள் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய அதன் இயக்குனருக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை இந்நீதிமன்றம் வழங்குகிறது.
எப்.ஐ.ஆர்., மற்றும் இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறுதல், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சேகரிக்கப்பட்டுள்ள, விடுபட்டுள்ள ஆவணங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி விசாரணை அதிகாரிக்கு அவ்வப்போது அறிவுறுத்த, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்க, முறையாக வழக்குப்பதிவு செய்வதை உறுதிப்படுத்த, தனி சட்ட நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும்.
விசாரணை அதிகாரி தொழில்நுட்ப ரீதியாக நிபுணத்துவம் பெற இயக்குனர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.