“இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் அஜித்குமார்

டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய நடிகர் அஜித்குமார் இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்றும், சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல், என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில், அஜித்குமார் சகோதரர் ரிச்சர்ட், மனைவி ஷாலினி மற்றும் மகள், மகன் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அஜித்குமார் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்றும், சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பஹல்காம் தாக்குதல் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இந்த சூழலில் சாதி, மதம் என்ற வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும். ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களுடைய தியாகங்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *