வீடு, மனை பத்திரப் பதிவு.. இனி யாரும் ஏமாற்ற முடியாது! வரப் போகுது புது ரூல்ஸ்.. தமிழக அரசு அதிரடி.!
நிலம், வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்களை பதிவு செய்யும் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அசையா சொத்துக்களை பத்திர பதிவு செய்யும்போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் இதனை தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. வீடுகளை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீடுகளாக மாறி வருகிறது. மேலும் தரிசு நிலங்கள், விவசாய பயன்பாட்டுக்கு ஒத்து வராத நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு பிரிக்கப்படும் நிலங்கள் பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது. பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், ஆவணப் பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவின் போது அசல் உரிமை மூல ஆவணத்தை தாக்கல் செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இதனை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது சொத்தின் மீது உரிமை உடைய முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு முன்னதாக 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த பதிவு ரத்து செய்யப்படும். மேலும் முறையாக அது பதிவு செய்யக்கூட ஏற்றுக் கொள்ளப்படாது.
ஒருவேளை பதிவு செய்யும் சொத்து முன்னோர்களின் சொத்தாக இருந்து. அதற்கான அசல் ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்த சொத்து தொடர்பாக வருவாய்த்துறை வழங்கி இருக்கும் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றாலும் அந்த ஆவணம் பதிவு செய்ய ஏற்கப் படாது. ஒருவேளை அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டால் ஆவணம் தொலைந்து போன போது வெளியான நாளிதழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், காவல்துறையால் வழங்கப்பட்ட ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 1949 விதி 55-ஏ-ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் ஒரே மாதத்திற்குள் மாநில அரசு நேற்று இந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.