2,428 ஏக்கர் நிலப்பகுதிகளில்… புதிய நீர்த்தேக்கங்கள் பல்துறைகளிடம் அனுமதி கோரும் மாநகராட்சி
சென்னையின் மைய பகுதிகளில் உள்ள தேசிய பூங்கா, ஐ.ஐ.டி., – கவர்னர் மாளிகை உள்ளிட்ட 2,428 ஏக்கர் நிலப்பரப்பு வளாகங்களில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக நீர்த்தேக்கங்கள் அமைத்து, வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதற்காக, தொடர்புடைய மத்திய – மாநில அரசுகளின் துறைகளின் அனுமதியை மாநகராட்சி கோரியுள்ளது.
சென்னையில் கனமழையின்போது, வெள்ள பாதிப்பு முக்கிய பிரச்னையாக உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்புக்குபின் கால்வாய், வடிகால் கட்டுவது, நீர்நிலைகள் துார்வாருதல் போன்ற பணிகள் செய்தாலும், வெள்ள பாதிப்பு குறையவில்லை.
குறிப்பாக, தென்சென்னையில் வேளச்சேரி, கிண்டி, தரமணி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
நீர்வழித்தடங்கள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பை,கழிவுநீர் நிரம்பி உள்ளதால், நீரோட்டம் தடைபட்டு வெள்ள பாதிப்புஅதிகரிக்கிறது.
சென்னையின் பெரும் பகுதி, சாலை மற்றும்குடியிருப்புகளாகஉள்ளதால், ஏரி, குளம், கால்வாய்களில் இருந்து வெளியேறும் வெள்ளம், எங்கெல்லாம் செல்லும் என்று ஆராய்ந்து, நீர்வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
ஓ.எம்.ஆர்., – வேளச்சேரி – தரமணி சாலை, அடையாறு ஆறு, ஜி.எஸ்.டி., சாலைக்கு உட்பட்ட பகுதியில், தேசிய பூங்கா, ஐ.ஐ.டி., கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலை உள்ளிட்ட வளாகங்கள், 2,428 ஏக்கர் பரப்பு கொண்டது.
இங்கு, அடர்த்தியான மரங்களுடன் பசுமையாக உள்ளதால், சென்னையின் நுரையீரலாக அமைந்துள்ளது. இங்கு வடியும் மழைநீர், 10 சதவீதம் அடையாறு ஆறு, 90 சதவீதம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, முட்டுக்காடு செல்கிறது.
வேளச்சேரியில் இருந்து முட்டுக்காடு வரை, நீரோட்ட பாதையில், 28 கி.மீ., துாரம் பயணித்து கடலில் சேர்க்கிறது.
தென்சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம் ஒக்கியம் மடு வழியாக, முட்டுக்காடு செல்கிறது.
இதோடு, 2,428 ஏக்கரில்தேங்கும் 90 சதவீதவெள்ளமும் சேர்ந்து செல்வதால், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
ஐந்து குளங்கள்
இதனால், புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்து, போதிய நீரை சேமிக்க மாநகராட்சி முயற்சி எடுத்து வருகிறது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகம், 160 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில், 6 ஏக்கர் பரப்பில், 5 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில், ஐந்து குளங்கள் மாநகராட்சி சார்பில் வெட்டப்பட்டன.
இதனால், கடந்த ஆண்டு பருவமழையின்போது, ரேஸ்கோர்ஸ் சுற்றி உள்ள பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. நிலத்தடிநீர் மட்டமும் அதிகரித்தது.
இதேபோல், கவர்னர் மாளிகையை உள்ளடக்கிய தேசிய பூங்கா, ஐ.ஐ.டி., – அண்ணா, சென்னை பல்கலைகள், சி.எல்.ஆர்.ஐ., தரமணியில் உள்ள அரசு வளாகங்களில் இடத்தின் தன்மையை பொறுத்து, நீர்த்தேக்கங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தொடர்புடைய மத்திய – மாநில அரசுகளின் துறைகளுடன் கலந்தாலோசித்து வருகிறது.
நம்பிக்கை
இதன் வாயிலாக, இந்த வளாகங்களின் பசுமை அதிகரிப்பதுடன், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நீர்த்தேக்கங்கள் அமைத்தது, பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதே போல, 2,428 ஏக்கர் பரப்பிலும், இடத்தின் தன்மையை பொறுத்து, சிறிய, பெரிய அளவில் நீர்த்தேக்கங்கள் அமைத்தால், வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.
இந்த இடங்கள்,வெவ்வேறு துறைகளிடம் உள்ளதால், அந்தந்த துறை உயர் அதிகாரிகளுக்குகடிதம் அனுப்ப உள்ளோம்.
வேளச்சேரியில் இருந்து முட்டுக்காடு செல்ல அதிக துாரமாக உள்ளதால், தேக்கிய வெள்ளம் போக மீதி வெள்ளத்தில் குறிப்பிட்ட பகுதியை, அடையாறு ஆற்றில் விடும் வகையில் ஆலோசித்து வருகிறோம்.
அரசுத்துறைகள் அனுமதி வழங்கினால், நீர்த்தேக்கங்கள் அமைக்க மாநகராட்சி தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிறுவனம் பெயர் பரப்பு (ஏக்கரில்)