மின்சார ரயில் வருகையை காட்டும் டிஜிட்டல் பலகை
மின்சார ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்து பயணியர் தகவல் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை – தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில், தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள, 160 ரயில் நிலையங்களில், பெரும்பாலும் புறநகர் ரயில் நிலையங்களாக இருக்கின்றன. ஆனால், போதிய வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, ரயில்களின் சேவை குறித்து தெளிவான கால அட்டவணை பலகை, பேனர்கள் இல்லை என, பயணியர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பயணியரின் தேவை கருதி, மின்சார ரயில் நிலையங்களில் புதிய டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மின்சார ரயில் நிலையங்களில் பயணியருக்கான அடிப்படை வசதி அளிக்கும் வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்ட்ரல், கடற்கரை, ஆவடி, வில்லிவாக்கம், பரங்கிமலை, கிண்டி, பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், நவீன டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சார ரயில் வழித்தடம், புறப்பாடு மற்றும் வருகை நேரம், நடைமேடை, ரயில் தாமதம் உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம் பெறும்.
இந்த திட்டம் மற்ற புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.