கோடை வெயில் அதிகரிப்பு எதிரொலி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்
சென்னை, சைதாப்பேட்டை, 140வது வார்டில் உள்ள, சென்னை மாநகராட்சி ‘அம்மா’ பூங்கா சீரமைப்பு பணியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்த பூங்கா, 3.64 கோடி ரூபாயில் புதுப்பிப்பதற்கான பணி துவங்கி உள்ளது. இங்கு, புதிய நுழைவாயில், கழிப்பறைகள், முதியோருக்கான சிறப்பு வழித்தடம், குழந்தைகள் விளையாட்டுப்பகுதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். இந்த பணிகள், மூன்று மாதங்களில் முடியும்.
தமிழகத்தில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், முதியோர், குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர். அதனால், வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
துண்டு பிரசுரங்களை வழங்கியும், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதேநேரம், பொதுமக்களுக்கு, வெயிலால் ஏற்படும் வெப்பவாதம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.