சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரிக்கு முதல் முறையாக சுற்றுலா கப்பல் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி, சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரிக்கு, முதல் முறையாக சுற்றுலா சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது.
சென்னை துறைமுகத்தில், 24 கப்பல்கள் நிறுத்த முடியும். மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் வாயிலாக, கடல்சார் துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சரக்கு கப்பல்கள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, சுற்றுலா கப்பல்களும் அவ்வப்போது வந்து செல்கின்றன.
இதற்கிடையே, வரும் கோடை விடுமுறையொட்டி, நாட்டின் பல்வேறு துறைமுகங்களை சென்றடைந்து, அங்குள்ள சுற்றுலா இடங்களை காணும் வகையில், சொகுசு கப்பலை இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை துறைமுகம் – ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் – புதுச்சேரிக்கு செல்லும் வகையில், கார்டிலியா நிறுவனத்தின், ‘எம்.வி.எம்பிரஸ்’ சுற்றுலா சொகுசு கப்பலை முதல் முறையாக இயக்க உள்ளது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த கப்பல், 691 அடி நீளம், 11 தளங்களைக் கொண்டது. ஒரே நேரத்தில் 1,840 பேர் பயணிக்கலாம். கப்பலில், 700 அறைகள், திறந்தவெளி திரையரங்கம், பெரிய உணவகங்கள், மதுக்கூடம், ஸ்பா, மசாஜ் நிலையம், உடற்பயிற்சி மையம், கேசினோ, நீச்சல் குளம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்த கப்பலில் திருமணம், விருந்து கொண்டாட்டங்கள் மற்றும் அலுவலக கூட்டங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் பங்களிப்போடு கோடை விடுமுறையில், ‘எம்.வி.எம்பிரஸ்’ என்ற சுற்றுலா சொகுசு கப்பல், சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரிக்கு முதல் முறையாக இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து நடுக்கடலுக்கு சென்று வரும் வகையிலும், சுற்றுலா கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா கப்பல் பயண திட்டம் வரும் ஜூன் 28ம் தேதி துவங்கப்படுகிறது.
இதுதவிர, இலங்கை, சிங்கப்பூர், தய்லாந்து மற்றும் மலேஷியா சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கப்பல் சுற்றுலா பயண தேதி மற்றும் கட்டண விபரங்களை, www.cordeliacruises.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டணம் 20,000 ரூபாய்.
சுற்றுலா இடங்கள் மற்றும் பயண நாட்களுக்கு ஏற்றார்போல், கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.