வில்லங்க சான்றிதழில் பிழைகள் சரிசெய்ய சார் – பதிவாளர்கள் மறுப்பு
வில்லங்க சான்றிதழில் காணப்படும் பிழைகளை சரிசெய்ய, சார் – பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதன் உண்மை தன்மையை அறிய வேண்டியது அவசியம். இதற்காக, சம்பந்தப்பட்ட சொத்துக்களின் முந்தைய பரிமாற்ற விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.
கவனக்குறைவு
தற்போது, ஒரு குறிப்பிட்ட சொத்து குறித்த வில்லங்க சான்றிதழ் தேவைப்பட்டால், ‘ஆன்லைன்’ முறையில் விண்ணப்பித்தால் போதும். குறிப்பிட்ட அவகாசத்தில் வில்லங்க சான்றிதழ் கிடைத்துவிடும்.
சமீபகாலமாக, ஆன்லைன் முறையில் வழங்கப்படும் வில்லங்க சான்றிதழ்களில், உரிமையாளர் பெயர், ஊர் பெயர், ‘சர்வே’ எண் போன்ற விபரங்களில் பிழைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பரப்பளவு குறித்த விபரம் இருக்க வேண்டிய இடத்தில் முகவரி குறிப்பிடப்படுகிறது.
கவனக்குறைவு காரணமாக ஏற்படும் இதுபோன்ற பிழைகளை திருத்த, சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள், சார் – பதிவாளர் வாயிலாக மாவட்ட பதிவாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, திருத்துவதற்கு அனுமதி பெறப்படும். இதன்படி, பத்திரங்களின் தகவல் தொகுப்பில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.இதுகுறித்து, சொத்து உரிமையாளர்கள் கூறியதாவது:
மவுனம்
பிழைகளை திருத்தம்செய்தால் மட்டுமே, அடுத்து வரும் வில்லங்க சான்றிதழ்களில் சரியான விபரங்கள் இருக்கும். ஆனால், இதற்கான விண்ணப்பங்களை, சார் – பதிவாளர்கள் கிடப்பில் போடுகின்றனர். இந்த விஷயத்தில், மாவட்ட பதிவாளர்களும் மவுனமாக இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வில்லங்க சான்றுகளில் பிழைகளை திருத்தக்கோரி, அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறோம்’ என்றார்.