ஸ்ரீ ராமச்சந்திராவில் 39 வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 39 வது பட்டமளிப்பு விழா, சென்னை போரூரில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக, ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குனர் ஜெனரல், துணை அட்மிரல் ஆர்த்தி சரின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் முனைவர், முதுநிலை, இளநிலை என, மொத்தம் 637 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறப்பாக செயல்பட்ட 29 மாணவர்களுக்கு, 40 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மருத்துவ மாணவி சஞ்சனா, ஐந்து தங்க பதக்கங்களை பெற்றார்.
விழாவில், துணை அட்மிரல் ஆர்த்தி சரின் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியா முழுதும் சிகிச்சை அளிக்கும் முறைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
செயற்கை நுண்ணறிவு, மரபணுசார் மருத்துவம், உடல் இயக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருவிகள் பயன்பாடு, ரோபோடிக் அறுவை சிகிச்சை என, மருத்துவ துறை நல்ல முறையில் வேகமாக முன்னேறி வருகிறது.
ராணுவத்திலும் அவசர தேவை உள்ளபோது, ட்ரோன்கள் வாயிலாக ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொலைதுார பகுதிகளுக்கு எளிதில் எடுத்து செல்ல முடிகிறது.
இளம் மருத்துவர்கள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நோயாளிகளின் குறைகளை பரிவோடு கேட்டறிந்து, அவர்களை கண்ணியத்தோடு அணுக வேண்டும்.
நம் நாடு உங்களை ஒரு மருத்துவராக மட்டுமே கருதாமல், ஒரு தலைவராகவும், கல்வியாளராகவும் பார்க்கிறது. கிராம மக்களுக்கு பணியாற்றுதல், பெண்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் நம் நாட்டின் நிலைத் தன்மையை போற்றும் பக்குவம் உங்களிடம் இருக்க வேண்டும்.
ராணுவத்தில் பணியாற்றாவிட்டாலும், உறுதியான மருத்துவராக நீங்கள் விளங்கினால், வாழ்க்கை என்ற போர்க்களத்தில் வீரராக விளங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், மருத்துவக்கல்லுாரி முதல்வர் கே.பாலாஜி சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.