மீண்டும் அமலுக்கு வரும் தாலிக்கு தங்கம் திட்டம்

தங்கம் விலை கடுமையாக உயர்ந்துஉள்ளதால், திருமணம் நடத்தும் வயதில் பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த தகவலை உளவு துறை வாயிலாக பெற்றுள்ள அரசு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த பரிசீலித்து வருகிறது.

ஏழை பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, மூவலுார் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கியது. பட்டம் பெற்ற மணமகளுக்கு, 50,000 ரூபாயும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

இத்திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது, பல்வேறு திட்டங்களின் கீழ், எட்டு கிராம் தங்கமும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் சவரன் விலை, 72,000 ரூபாயை எட்டியுள்ளது.

இதனால், திருமணம் நடத்தும் வயதில் பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை பெற, அரசு திட்டமிட்டுள்ளது; தங்கம் விலை உயர்வால் ஏழை பெண்கள், குறிப்பாக திருமணமாகும் வயதில் இருப்பவர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த தகவலை உளவு துறை வாயிலாக அரசு பெற்றுள்ளது. எனவே, மாதம், 1,000 ரூபாய் பெறாத கல்லுாரி மாணவியரை உள்ளடக்கிய, அனைத்து ஏழை பெண்களும் பயன்பெறும் வகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *