டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு; ஜூலை 12 ல் பங்கேற்க இன்றே விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4) தேர்வு ஜூலை 12 ல் நடக்க உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான 3935 காலியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ஏப்.25 முதல் மே 24 வரை தேர்வாணைய இணையதள முகவரியில் (www.tnpscexams.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மே 29 முதல் 31 வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
”2018 -2025 வரையான 8 ஆண்டுகளில் முதன்முறையாக இடைவெளியின்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வந்துள்ளன. 2022ல் மூன்று ஆண்டுகளுக்கான காலியிடங்களும், 2024ல் 2 ஆண்டுகளுக்கான காலியிடங்களும் ஆக மொத்தம் 5 ஆண்டுகளுக்கு 17 ஆயிரத்து 799 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 3560 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2025ல் மட்டும் மேற்கண்ட காலியிடங்களை விட கூடுதலாக (3935) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு, அரசு நிறுவனங்களிடம் இருந்து பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும்பட்சத்தில், கலந்தாய்வுக்கு முன்பே பணியிடங்கள் அதிகரிக்கப்படும்” என டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.