முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை சென்னையில் இன்று துவக்கம்

சென்னையில் முதல், ‘ஏசி’ மின்சார ரயில் சேவை இன்று துவங்குகிறது

சென்னை, ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, 12 பெட்டிகள் உடைய முதல், ‘ஏசி’ மின்சார ரயிலில், அமர்ந்தபடி 1,116 பேர், நின்றபடி 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.

கடந்த 6ம் தேதி, ராமேஸ்வரத்துக்கு வந்த பிரதமர், இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது துவங்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் முதல், ‘ஏசி’ மின்சார ரயில் சேவை இன்று துவங்கி வைக்கப்படுகிறது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00, மதியம் 3:45 மற்றும் இரவு 7:35 மணிக்கு புறப்படும் ‘ஏசி’ ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26, இரவு 8.30 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு சேவை, செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், செங்கல்பட்டில் இருந்து காலை 9:00, மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு காலை 9:41, மாலை 6:26 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு சென்றடையும்.

தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில், காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படும்.

இந்த ரயில், அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும், புறநகர் பாதையில் இயக்கப்படும்.

பிரதான பாதையில் செல்லும்போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும் என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *