மெரினா நுாலகத்தில் ‘காமிக்ஸ் கார்னர்’ புதிதாக திறப்பு
சென்னை மாநகர நுாலக ஆணைக்குழுவின் கீழ், சென்னை மெரினா கடற்கரை பகுதியில், மெரினா கிளை நுாலகம் செயல்படுகிறது. இது, 38.40 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வருவோரை ஈர்க்கும் வகையிலான முகப்பு பகுதி, உயரமான சுற்றுச்சுவர், கடல்வாழ் உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள், மூங்கில் வளைவு பாதை, வசதியான இருக்கைகள், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சிறுவர்களை வாசிப்பு பழக்கத்திற்கு உட்படுத்தும் வகையில், ‘காமிக்ஸ் கார்னர்’ என்ற பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பட விளக்க கதைப்புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு, 7,500க்கும் மேற்பட்ட நுால்களும், 1,337 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த புதுப்பிக்கப்பட்ட நுாலகத்தை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். புரவலர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், அத்துறை செயலர் சந்திரமோகன், பொது நுாலகத்துறை இயக்குனர் சங்கர், சென்னை மாநகர நுாலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.